×

சர்ப்ப தோஷம் போக்கும் அர்த்தநாரீஸ்வரர்

திருச்செங்கோடு, நாமக்கல்பிருகு மகரிஷி ஒரு முறை சிவனை தொழச் சென்றார். எல்லா தேவர்களும் பார்வதி தேவியை தொழுது பின் சிவனை ஆராதிக்க, பிருகு மகரிஷி சிவனை மட்டும் வழிபட, பார்வதிதேவி கோபமுற்றார். என்னை பிருகு மகரிஷி ஏறெடுத்தும் பாராமல் உம்மை மட்டும் தொழுகிறார். என்னை இப்படி உதாசீனப்படுத்திய அவரால் நான் மனம் நொந்துவிட்டேன். ஆகவே, இனி நான் தனியே வீற்றிருக்கப்போவதில்லை. உம்முடைய சரீரத்தில் எனக்கும் சரிபாதி வேண்டும்’’ என சிவனை அந்த மகா சிவராத்திரி நன்னாளில், உருகி பிரார்த்தித்தார். உடனே சிவபெருமான், ‘‘உமையவளே, நீ கொடிமாடச் செங்குன்றூர் சென்று அங்கே அமர்ந்து எம்மை நோக்கி தபசு செய். உம் விருப்பம் நிறைவேறும்,’’ என்றார். சிவபெருமானின் 64 அம்சங்களில் மிகவும் சிறந்ததாக போற்றப்படும் அந்த நாக மலையில் அன்னை பராசக்தி தபசு செய்ய, விக்கிரம ஆண்டு மாசி மாதம் மகா சிவராத்திரி அன்று அர்த்தசாம வேளையில் தனது உடம்பில் பாதியை பார்வதி தேவிக்குத் தந்தார் ஈசன். அப்போது வசிஷ்ட மகரிஷி ‘மாத்ரு பாகரே போற்றி’ என்று வாழ்த்தினார். பிருகு மகரிஷி, ‘பாகம்பிரியாளே, சரணம் சரணம் ப்ரபத்யதே’ என்று சரணடைந்தார். மகேஸ்வரனின் இந்தக் கோலமே அர்த்தநாரீஸ்வரர். இந்த அம்சம் உருவாக காரணமான பிருகு மகரிஷியை தனது திருவடி கீழ் நின்று என்றும் ஆராதிக்க பார்வதி தேவியார் அனுக்கிரஹம் செய்தார். நீண்ட காலம் துறவி நின்றால் கால் வலிக்குமே என மூன்றாவது ஒரு காலையும் பிருகு மகரிஷிக்கு தந்ததும் சிவபெருமானே. ‘‘மூன்று கண்களை சிவன் கொண்டமையால், அவர் ‘முக்கண்ணனார்’ என்ற பெயர் சிவனுக்கு என்றால், மூன்று கால்களை பிருகு மகரிஷி கொண்டமையால் இவர் ‘முக்கால் முனி’ என்றார் கணபதி. பிருகு மகரிஷி அனுதினம் சிவபூசை செய்ய நீர் வேண்டும் என்பதற்காக கங்கையே அர்த்தநாரீஸ்வரர் திருவடியில் தோன்றிற்று. பொதுவாக தன் முடியில்தான் சிவன் கங்கையை வைத்திருப்பார். ஆனால், இங்கே அவரது பாதக் கமலத்தில் கங்கை ப்ரவாகம் செய்கிறாள். இதுவே பக்தர்களுக்கு தீர்த்தமாக விநியோகம் செய்யப்படுகிறது. ஆறு அடி உயரத்தில், அர்த்தநாரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருட்காட்சி நல்குகிறார். இந்த திவ்ய சேத்திரத்தை நாடி ஆதிசேஷன், பிரம்மா, விஷ்ணு, முருகன் மற்றும் அனைத்து சித்தர்களும் வந்து தொழுத வண்ணம் நின்றனர். ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் அர்த்த நாரீஸ்வரரிடம் அதிக பக்தி. பக்தி மேலீட்டால், வாயு பகவான் நடனமாடி ஆதிசேஷன் மேல் விழ, அவர் உடல் நசுங்கிற்று. அவர் உடம்பில் இருந்து வந்த ரத்தம் அங்குள்ள பாறையில் விழுந்து சிவந்தமையால், செங்குன்றம் என்றானது. ஆதிசேஷன், சிவனின் கோயிலைக் காவல் காக்கின்றார். எனவே, மூன்று சர்ப்பத் தலைகள் இன்றும் கோயிலின் முகப்பில் தென்படுகின்றன. அம்மை அப்பரின் அழகிய திருவுருவை எப்போதும் இருந்து அனுபவிக்க வேண்டும் என்று மகாவிஷ்ணு இங்கேயே கோயில் கொண்டுள்ளார். இதுவே ஆதிகேசவப் பெருமாள் ஆலயம். மலைமேல் பாம்பு சிற்பம் இன்றும் உண்டு. இது ஆதிசேஷன் வடிவம் என்கிறது நாடி.‘‘உமைபங்காளரை ஒருநாளும் பிரியாது கேசவன் இருக்க கண்டோமே. அழகன் முருகன் செங்கோட்டு வேலனாய் நின்றருள் பாலிக்க கண்டின்புற்றோமே.சட்(ஷ்)டி கணபதி பெரும் பதவி தர பார்த்திருப்ப பாரீரே’’ என்கிறார் கோலமகரிஷி. இவரை கொள்ளுர் சித்தர் என்றும் அழைப்பர். இங்கு மகா சிவராத்திரியில் விரதம் இருந்து தரிசனம் செய்பவருக்கு கொடிய நோய்கள் விலகும். அரசியலில் மிகப்பெரிய பொறுப்புகள் வந்து சேரும். நல்ல திடகாத்திரமான நோயற்ற உடல் கிட்டும். என்பது நம்பிக்கை.தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

The post சர்ப்ப தோஷம் போக்கும் அர்த்தநாரீஸ்வரர் appeared first on Dinakaran.

Tags : Thiruchengod ,Namakalbariku Maharishi ,Shiva ,Parvati ,Sarbha Dosha Thanariswara ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு